கார் பந்தயத்தில் அசத்தும் சென்னை சிறுவன் ஆதித்யா: தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்து அசத்தல்

பெங்களூரு: தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப்பில் கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆதித்யா அரவிந்த் முதலிடம் பிடித்துள்ளார். கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் சீசனிலேயே தேசிய அளவிலான ரேஸில் முதலிடம் பிடித்துள்ளார். பெங்களூருவில் சமீபத்தில் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு சார்பில் தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 27 இளம் டிரைவர்கள் 3 பிரிவுகளில் பங்கேற்றனர். சீனியர் பிரிவில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த ஆதித்யா அரவிந்த் முதலிடம் பிடித்தார்.

அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் ஆதித்யாவுக்கு சிறு வயதில் இருந்தே கார்கள் மீது பிரியம். மோட்டர் ஸ்போர்ட்ஸ் மீதான தங்கள் மகனின் ஆர்வத்தை புரிந்து கொண்ட அவரது பெற்றோர் ஆதித்யாவை முன்னணி கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் அகாடமியில் சேர்த்தனர். அங்கு பார்முலா 2 ரேஸில் பங்கேற்ற அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் பயிற்சி அளிக்க துரிதகதியில் நுணுக்கங்களை கற்று கொண்ட ஆதித்யா ஜூனியர் அளவிலான போட்டிகளில் கலக்க தொடங்கினார். கடந்த ஆண்டு மெக்கோ மேரிட்டஸ் கோப்பையில் சாம்பியன், மலேசியாவில் நடந்த சர்வதேச ஜூனியர் கார்ட்டிங் தொடரில் சாம்பியன் என தொடர்ந்து அசத்தி தற்போது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி மொத்தம் 5 சுற்றுகளை கொண்டது. 5 சுற்றுகள் முடிவில் முதலிடம் பிடிக்கும் இந்திய வீரர் அடுத்ததாக பஹ்ரைனில் நடைபெற உள்ள ரோட்டக்ஸ் மேக்ஸ் கிராண்ட் ஃபைனலில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார். தனது முதல் சீனியர் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றிலேயே வெற்றி வாகை சூடியுள்ள ஆதித்யா பஹ்ரைனில் நடைபெறும் தொடருக்கு தகுதி பெறுவதே தனது அடுத்த இலக்கு என்கிறார். இந்தியாவில் மெட்டோர் ஸ்போர்ட்ஸை உன்னிப்பாக கவனிப்பவரும் ஆதித்யாவுக்கு அந்த தகுதி இருப்பதாகவே கணிக்கின்றன.

The post கார் பந்தயத்தில் அசத்தும் சென்னை சிறுவன் ஆதித்யா: தேசிய கார்ட்டிங் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்து அசத்தல் appeared first on Dinakaran.

Related Stories: