ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி சீனா – கொரியா டிரா

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் தொடரில் சீனா – கொரியா மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. சென்னையில் நேற்று மாலை நடந்த 3வது சுற்று லீக் ஆட்டத்தில் சீனா – கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமசந்திரன், எம்எல்ஏ ஜே.ஜே.எபினேசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் உடன் இருந்தனர். விடுமுறை என்பதால் ரசிகர்கள் பலர் குடும்பத்தினருடனும், குழுந்தைகளுடனும் வந்திருந்தனர்.

இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தியதால், முதல் குவார்ட்டரில் கோல் ஏதும் விழவில்லை. 2வது கால் மணி நேர ஆட்டத்தில் தாக்குதலை தீவிரப்படுத்திய கொரியா அணிக்கு ஜோங்ஹியும் ஜாங் கோல் அடிக்க (18வது நிமிடம்), அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. 3வது குவார்ட்டரில் துடிப்புடன் விளையாடி நெருக்கடி கொடுத்த சீன அணி, சோங்காங் சென் 43வது நிமிடத்தில் அபாரமாக பீல்டு கோல் அடிக்க 1-1 என சமநிலை ஏற்படுத்தியது. கடைசி 15 நிமிட ஆட்டத்தில், வெற்றி முனைப்புடன் விளையாடிய இரு அணிகளும் முட்டல் மோதலில் இறங்கின. அதனால் நடுவரின் எச்சரிக்கைக்கு ஆளான கொரிய வீரர் சுங்கூயுன் லீ 5 நிமிடம் வெளியில் உட்கார வைக்கப்பட்டார்.

அதன் பிறகு கிடைத்த சில பெனால்டி வாய்ப்புகளை இரு அணிகளுமே வீணடித்தன. மேற்கொண்டு கோல் ஏதும் விழாததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சிறந்த இளம் வீரருக்கான விருதை சீன வீரர் ஜுன்ஜி லியூ, சிறந்த ஆட்டக்காரருக்கான விருதை கொரிய வீரர் சுங்கூயுன் லீ பெற்றனர். விருதுகளை அமைச்சர் ராமசந்திரன், எம்எல்ஏ எபினேசர் ஆகியோர் வழங்கினர்.

The post ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி சீனா – கொரியா டிரா appeared first on Dinakaran.

Related Stories: