வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து போலீசார் ஏற்பாடு

பெரம்பூர்: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலை விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வியாசர்பாடி போக்குவரத்து போலீசார் சார்பில் நேற்று வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வியாசர்பாடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும், சிக்னல்களில் சாலை விதிகளை மீறினால் தற்போது பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள் மூலம் எவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்தும் கார் ஓட்டுனர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் அவ்வாறு வழக்குப் பதிவு செய்யும்போது அதை கார் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அபராதம் செலுத்த தவறினால் வருங்காலங்களில் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும்ம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதேபோன்று புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புளியந்தோப்பு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், அதை எவ்வாறு அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார்.

The post வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து போலீசார் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: