ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை வன்னியர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபுவிடம், நிர்வாகிகள் மனு

காஞ்சிபுரம்: மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை சொந்தமான நிலங்களை வன்னிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவிடம், நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு வன்னிய குல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஜெயராமன் தலைமையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், கூறியிருப்பதாவது: ஆயிரம்காணி ஆளவந்தார் நாயக்கர் 22.6.1914ம் ஆண்டு எழுதி வைத்த உயிலின்படி திருவிடந்தை முதல் திருகடல்மலை என்னும் மாமல்லபுரம் வரை உள்ள நிலங்கள் மற்றும் திருப்பதி கோயில்களில் அவரது திருநட்சத்திரம் நாட்களில் விழா, அன்னதானம் நடத்துமாறு உயிலில் எழுதியுள்ளார், அவரின் உயிலின்படி சமயம் சார்ந்த நோக்கத்திற்கான ஏற்படுத்தப்பட்ட அனைத்து அறக்கட்டளைகளும் தர்ம காரியத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையாகும். மேலும், ஆளவந்தார் நாயக்கர் மேற்படி சொத்துக்களை கோயிலுக்கு எழுதி வைக்கவில்லை.

ஆளவந்தர் நாயக்கர் வன்னியர் குல சத்திரிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட சட்டம் 44/2018 கீழ் உருவாக்கப்பட்ட வன்னிய பொது சொத்து நலவாரியத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென பலமுறை வாரியம், இந்து சமய அறநிலைத்துறையை அணுகியும், ஆளவந்தார் அறக்கட்டளையை வாரியத்திடம் ஒப்படைக்கவில்லை. இந்த சூழலில் மேற்படி ஆளவந்தார் நிலங்களை தனி நபர்களும், குழுக்களை சேர்ந்தவர்களும் அபகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், ஆளவந்தார் அறக்கட்டளை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை தனியாருக்கு குத்தகை விடுவதை தடுக்க வேண்டும் என்றும், உடனடியாக ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை இந்து சமய அறநிலைத்துறை, வன்னிய பொது சொத்து நல வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். உடன் வன்னிய நலவாரிய உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி நடராசன், நரசிம்மன், காஞ்சிபுரம் குமார், ஆனந்தி சரவணன், மகாதேவிஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை வன்னியர் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபுவிடம், நிர்வாகிகள் மனு appeared first on Dinakaran.

Related Stories: