மதுரை எய்ம்ஸ் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் : உயர்தர தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க பரிந்துரை!!

மதுரை : மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மாநில சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2006ன் கீழ், மதுரை எய்ம்ஸ் கட்டுமானமானத்திற்கு மாநில அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியமாகும். இந்த அனுமதியை பெறுவதற்கு, இம்மருத்துவமனையின் கட்டுமானத்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (EIA) மேற்கொள்வது அவசியமாகும். இந்த பணியை மேற்கொள்வதற்கான ஆய்வு எல்லைகளை (TOR) வழங்குமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதியன்று விண்ணப்பம் செய்தது.

இந்த நிலையில், மே 2ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில சுற்றுச்சூழல் துறையிடம் எய்ம்ஸ் நிர்வாகம் சமர்ப்பித்தது. மே 10-ல் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என ஒப்புதல் அளித்துள்ள சுற்றுச் சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. சிவகாசி, விருதுநகர் மாவட்டங்களில் ஏற்படக்கூடிய வெடி விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதற்கான உயர்தர தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க வேண்டும், மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், தரமான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை நிறுவ வேண்டும், மழைநீர் வடிவால் வசதி, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனை கேன்டீனில் சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டும், எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு சில நாட்களில் தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post மதுரை எய்ம்ஸ் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் : உயர்தர தீக்காய சிகிச்சை பிரிவை உருவாக்க பரிந்துரை!! appeared first on Dinakaran.

Related Stories: