தனக்கு கல்வி மறுக்கப்பட்ட திருவாரூரில் ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கியவர் கலைஞர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம்

பெரம்பூர்: தனக்கு கல்வி மறுக்கப்பட்ட திருவாரூரில் ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கியவர் கலைஞர் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் சூட்டினார். சென்னை கிழக்கு மாவட்டம், திருவிக நகர் வடக்கு பகுதி 71வது அ வட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞருக்கு பாராட்டு விழா ஓட்டேரியில் நேற்று முன்தினம் நடந்தது. 71வது அ வட்டச் செயலாளர் ருத்ரமூர்த்தி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, அருட்தந்தை ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசும்போது, ‘‘மனிதநேய மக்களின் முதல்வராக ஸ்டாலின் செயல்படுகிறார். தமிழ் சமுதாயத்தை, பண்பாட்டை பல நூற்றாண்டுக்கு உயர்த்திப் பிடித்தவர் கலைஞர். காயப்படுத்தப்பட்ட மொழியாக, சேதப்படுத்தப்பட்ட மொழியாக, ஒடுக்கப்பட்ட மொழியாக இருந்த தமிழ் மொழி, செம்மொழியாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க காரணம் கலைஞர்தான்.

கலைஞரின் தமிழ்தான் கடைக்கோடி தமிழரின் பாரம்பரியத்தை பரிமாறிக்கொண்டிருக்கிறது. கலைஞரின் தமிழை வாசிப்பவர்களுக்கு எப்போதும் தமிழ் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். கலைஞர் 5ம் வகுப்பு பயிலும்போது அவருக்கு திருவாரூரில் கல்வி மறுக்கப்பட்டது. கல்வி நிராகரிக்கப்பட்ட திருவாரூரிலேயே ஒரு மத்திய பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் கலைஞர். அனைவருக்கும் அனைத்தையும் பெற்று தந்து ஒரு சமூக சீர்திருத்தவாதியாக திகழ்ந்தவர் கலைஞர்,’’ என்றார்.

The post தனக்கு கல்வி மறுக்கப்பட்ட திருவாரூரில் ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கியவர் கலைஞர்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: