சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசல்: போலீசார் குவிப்பு

அண்ணாநகர், ஜூன் 12: தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் நேற்று காலை சென்னைக்கு திரும்பிதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ஜூன் முதல் வாரம் வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, சென்னையில் வசித்து வந்த திருச்சி, மதுரை, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் சென்றனர். இந்நிலையில், கத்திரி வெயில் முடிந்த நிலையிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. எனவே, பள்ளிகல்வித்துறை மாணவ, மாணவியர் நலன் கருதி கோடை விடுமுறையை நீட்டித்தது.

இந்நிலையில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் கடந்த சில நாட்களாக சென்னைக்கு திரும்பிவந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கார், பஸ், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சென்னைக்கு வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சில நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். போக்குவரத்து போலீசார் நெரிசலை சீரமைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். இதன் காரணமாக, அங்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும், பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கோயம்பேடு நெடுஞ்சாலை, காய்கறி மார்க்கெட் பகுதி, ஆம்னி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. எனவே, போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் திண்டாடினர். இதையடுத்து, போக்குவரத்து போலீசார் குவிக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

The post சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பியதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நெரிசல்: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: