டெஸ்ட் போட்டிகள்தான் திறமைக்கு சரியான சவால்…நடராஜன் சொல்கிறார்

திருப்பூர்: டெஸ்ட் போட்டியில்தான் ஒரு வீரர் தனது முழு திறமையை நிரூபிக்க முடியும் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். டிஎன்சிஏ சார்பில், திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள ஸ்கூல் ஆப் கிரிக்கெட் வையர் மைதான வளாகத்தில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் பயிற்சி மையம் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், இந்திய கிரிக்கெட் அணி வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார். அப்போது, பவுலிங் மற்றும் பேட்டிங் பயிற்சி செய்த அவருடன், திருப்பூர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் குழந்தைகள் ஆட்டோகிராப் பெற்றதுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: 20 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என இரண்டையும் ஒன்றாக பார்க்க முடியாது. ஒவ்வொன்றும் தனித்துவமானது. எப்போதும் டெஸ்ட் போட்டியில்தான் ஒரு வீரர் தனது முழு திறமையை நிரூபிக்க முடியும். சிறு வயதிலிருந்தே தான் சார்ந்த விளையாட்டின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, சரியான முறையில் பயிற்சி மேற்கொண்டு விளையாடினால் நிச்சயம் சிறந்த வீரர்களாக முடியும்.

தற்போது, வாய்ப்புகள் அதிக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற தொடர்கள் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. டிஎன்பிஎல் மூலமாக 13 பேர் ஐபிஎல் போட்டியில் தமிழகத்தில் இருந்து இடம்பெற்றுள்ளனர். வீரர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு இதுபோன்ற பயிற்சி மையங்கள் அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post டெஸ்ட் போட்டிகள்தான் திறமைக்கு சரியான சவால்…நடராஜன் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: