பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸ் 4வது சுற்றுக்கு முன்னேறினார். மூன்றாவது சுற்றில்அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவுடன் (29 வயது, 3வது ரேங்க்) நேற்று மோதிய மெர்டன்ஸ் (27 வயது, 28வது ரேங்க்) 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (25 வயது, 2வது ரேங்க்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கமிலா ராக்கிமோவாவை (21 வயது, 82வது ரேங்க்) எளிதாக வீழ்த்தினார்.
இப்போட்டி 1 மணி, 7 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் பெய்டன் ஸ்டியர்ன்ஸ் (21 வயது, 69வது ரேங்க்) உடன் மோதிய ரஷ்ய நட்சத்திரம் டாரியா கசட்கினா (26 வயது, 9வது ரேங்க்) 6-0, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலி வீரர் லாரன்ஸோ சொனேகோ (28 வயது, 48வது ரேங்க்) சவாலை சந்தித்த ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லேவ் (25 வயது, 7வது ரேங்க்) 7-5, 6-0 என முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும் அடுத்த 3 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த சொனேகோ 5-7, 0-6, 6-3, 7-6 (7-5), 6-3 என 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் (27 வயது, 11வது ரேங்க்) 6-4, 6-1, 3-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் தனானி கோக்கினாகிஸை (27 வயது, 108வது ரேங்க்) வீழ்த்தினார். இந்த போட்டியும் 3 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் மெர்டன்ஸ்: பெகுலா, ருப்லேவ் அதிர்ச்சி appeared first on Dinakaran.