சில்லி பாயின்ட்…

* தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் லக்‌ஷியா சென் தகுதி பெற்றார். காலிறுதியில் மலேசியாவின் ஜுன் ஹோ லியோங்குடன் நேற்று மோதிய லக்‌ஷியா 21-19, 21-11 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 41 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், தனது காலிறுதியில் பிரான்ஸ் வீரர் தோமா ஜூனியர் பாப்வோவிடம் 16-21, 17-21 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறினார்.

* லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்துடன் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச, அயர்லாந்து முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது (56.2 ஓவர்). பிராடு 5, லீச் 3, பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன் எடுத்திருந்த இங்கிலாந்து (கிராவ்லி 56), 2ம் நாளான நேற்று டக்கெட், போப் இருவரும் சதம் விளாசியதால் அபாரமாக ரன் குவித்தது. டக்கெட் 182 ரன் விளாசி அவுட்டானார். ஜோ ரூட் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, போப் இரட்டை சதம் நோக்கி முன்னேறினார்.

* இலங்கை அணியுடன் அம்பாந்தோட்டையில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை 50 ஓவரில் 268 ரன் ஆல் அவுட் (அசலங்கா 91, தனஞ்ஜெயா 51, நிசங்கா 38). ஆப்கானிஸ்தான் 46.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 269 (இப்ராகிம் ஸத்ரன் 98, ரகமத் ஷா 55, ஹஷ்மதுல்லா 38). ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை நடைபெற உள்ளது.

* எப்ஐஎச் புரோ லீக் ஹாக்கி தொடரில் ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியம் அணியுடன் நேற்று மோதிய இந்தியா கோல் மழை பொழிந்தது. விவேக் சாகர், கேப்டன் ஹர்மன்பிரீத் (2), அமித் ரோகிதாஸ் கோல் அடிக்க, இந்தியா இடைவேளையின்போதே 4-0 என முன்னிலை வகித்தது. 2வது பாதியில் கடும் நெருக்கடி கொடுத்த பெல்ஜியம் அணியால் ஒரே ஒரு ஆறுதல் கோல் மட்டுமே அடிக்க முடிந்தது (46வது நிமிடம், வில்லியம்). கடைசி நிமிடத்தில் தில்பிரீத் சிங் கோல் அடிக்க ஆட்ட நேர முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: