நடப்பு சாம்பியன் குஜராத்-மும்பை மோதல் பைனலுக்கு நுழையபோவது யார்? அகமதாபாத்தில் இன்று குவாலிபயர் 2 போட்டி

அகமதாபாத்: 16வது ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. குவாலிபயர் 1 போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டிக்கு நுழைந்து உள்ளது. இந்நிலையில் குவாலிபயர் 2 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன. குஜராத் லீக் சுற்றில் 10 வெற்றி, 4 தோல்வியுடன் முதல் இடம்பிடித்து அசத்திய நிலையில் சிஎஸ்கேவிடம் சறுக்கலை சந்தித்தாலும் இன்று வெற்றிபெற்று 2வது முறையாக பைனலுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது. சுப்மன் கில் 2 சதம், 4 அரைசதத்துடன் 722 ரன் குவித்து 2வது இடத்தில் உள்ளார். அவர் இன்று 9 ரன் அடித்தால் டூபிளசிசை (730) முந்தி முதல் இடத்தை பிடிப்பார்.

விஜய் சங்கர், சஹாவும் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். கேப்டன் ஹர்திக்பாண்டியா, டேவிட் மில்லர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பவுலிங்கில் ஷமி 26, ரஷித்கான் 25 விக்கெட் எடுத்து முதல் 2 இடத்தில் உள்ளனர். மொகித்சர்மாவும் 19 விக்கெட் எடுத்து மிரட்டி உள்ளார். சொந்த மண்ணில் ஆடுவது அவர்களுக்கு மேலும் வலுசேர்க்கும். மறுபுறம் 5 முறை சாம்பியனான மும்பை லீக் சுற்றில் 8 வெற்றி, 6 தோல்வியுடன் 4வது இடத்தை பிடித்து பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்தது. எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை சாய்த்த நிலையில் இன்று வெற்றியை தொடரும் உத்வேகத்தில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் 544 ரன், கேமரூன் கிரீன் 422 ரன் மற்றும் 6 விக்கெட் எடுத்துள்ளார். பந்துவீச்சில் பியுஷ்சாவ்லா 21 விக்கெட் எடுத்து டாப் 5 பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆகாஷ் மத்வால் (7 போட்டியில் 13 விக்கெட்) புதிய ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

பைனலுக்குள் நுழைய சமபலத்துடன் உள்ள இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் மும்பை 2, குஜராத் ஒன்றில் வென்றுள்ளன. நடப்பு சீசனில் மோதிய 2 போட்டியில் தலா ஒன்றில் வெற்றி கண்டுள்ளன. அகமதாபாத் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக உள்ளது. இங்கு 4 போட்டிகளில் 200 ரன்னுக்குமேல் குவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் குஜராத் இங்கு ஆடிய 7 போட்டியில் 4ல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சேசிங்கில் இரு அணிகளும் வலுவாக இருப்பதால் டாஸ் வெல்லும் அணி பவுலிங்கையே தேர்வு செய்யும். இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி நாளை மறுநாள் இறுதி போட்டியில் சிஎஸ்கேவுடன் பலப்பரீட்சை நடத்தும்.

The post நடப்பு சாம்பியன் குஜராத்-மும்பை மோதல் பைனலுக்கு நுழையபோவது யார்? அகமதாபாத்தில் இன்று குவாலிபயர் 2 போட்டி appeared first on Dinakaran.

Related Stories: