செங்கமலபட்டியில் இப்போ விழுமோ…எப்போ விழுமோ: குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலபட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி அருகே செங்கமலபட்டி முருகன் காலனியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. மின்மோட்டார் அடிக்கடி பழுது, குடிநீர் தொட்டி சேதமடைந்த நிலையில் இருந்ததாலும் புதியதாக வேறொரு இடத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் பழைய தண்ணீர் தொட்டியை பராமரிப்பு செய்யாமலும், இடித்து அப்புறப்படுத்தாமலும் அப்படியே விட்டுவிட்டனர்.இதனால் அந்த நீர்த்தேக்க தொட்டி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடின்றி இருப்பதோடு மட்டுமின்றி உறுதியற்ற நிலையிலும் உள்ளது. தொட்டியின் 4 பக்க தூண்களும் வலுவிழந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. அவ்வப்போது தொட்டியின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவதால் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து கீழே விழும் அபாயகரமான சூழலில் உள்ளது. எனவே, குடிநீர் தொட்டி இடிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாகவே இதனை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post செங்கமலபட்டியில் இப்போ விழுமோ…எப்போ விழுமோ: குடிநீர் தொட்டியை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: