மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், ஜடேஜாவின் சிறப்பான சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். மும்பை அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4 ஓவரில் 38 ரன் சேர்த்தது. ரோகித் 21 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி தேஷ்பாண்டே பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
இஷான் 32 ரன் எடுக்க, சூரியகுமார் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். கேமரூன் கிரீன் 12 ரன், அர்ஷத் கான் 2 ரன்னில் வெளியேற, மும்பை 76 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த திலக் வர்மா – டிம் டேவிட் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 26 ரன் சேர்த்தது. திலக் வர்மா 22 ரன், டிரைஸ்டன் ஸ்டப்ஸ் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டேவிட் 31 ரன் (22 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரகானே வசம் பிடிபட்டார்.
மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. ஹ்ரித்திக் ஷோகீன் 18 ரன், பியுஷ் சாவ்லா 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் ஜடேஜா 4 ஓவரில் 20 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். தேஷ்பாண்டே, சான்ட்னர் தலா 2, சிசந்தா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
The post ஜடேஜா சுழலில் மும்பை திணறல் appeared first on Dinakaran.
