காட்பாடி அருகே துணிகரம் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

வேலூர், செப்.22: விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி தாராபடவேடு குளக்கரை அருகே சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடக்கிறது. சுற்றியுள்ள பகுதி மக்களும் கோயிலில் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் பூசாரி கோயிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை கோயில் நடை திறக்க வந்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கோயிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு இருந்தது. அந்த உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் திருட்டு போனது தெரிய வந்தது. இரவு கோயில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் உண்டியலையும் உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்தியிருந்தனர். இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: