மின் இணைப்பு ரத்து செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் செலுத்திய தொகை திருப்பி தர உத்தரவு

கோவை, ஆக.8: ஆன்லைன் மூலமாக மின் இணைப்பிற்கு பதிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் செலுத்திய தொகையை திருப்பித்தர மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மின்வாரியம் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக புதிய மின் இணைப்பு மற்றும் கூடுதல் மின்பளு வேண்டி ஆன்லைன் மூலமாகவே ஆவணங்கள் பதிவேற்றம் செய்து விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறை அமல்படுத்தி உள்ளது. அதன்படி, மின் இணைப்பு, கூடுதல் மின்பளு, பெயர் மாற்றம் உள்ளிட்ட சில சேவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பம் பதிவு செய்தவுடன் குறிப்பிட நாட்களுக்குள் கட்டணம் செலுத்துமாறு குறுஞ் செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஏராளமானோர் இணையதளம் மூலமாக கட்டணங்களை செலுத்தியுள்ளனர். இவ்வாறு, தொகை செலுத்திய பின் பிரிவு அலுவலர்களால் ஆய்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கும் போது உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யாததால் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பம் ரத்து செய்யும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்னர், மீண்டும் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதில், ரத்து செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு செலுத்திய தொகையை மின்வாரியம் திருப்பி தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் சார்பில் ரத்து செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் செலுத்திய தொகைகளை உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் அல்லது அதே பெயரில் வேறு மின் இணைப்பு இருந்தால் அதில் வரவு வைக்கவேண்டும் என சென்னையிலுள்ள இயக்குனர் நிதி மற்றும் மின்வாரிய தலைவர், கோவை தலைமைபொறியாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சென்னையிலுள்ள மின்வாரிய தலைமைபொறியாளர் வணிகம் வெளியிட்ட உத்தரவில், ரத்து செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் செலுத்திய தொகைகளை அவர்களது வங்கி கணக்கில் திருப்பி வழங்கும் வகையில் தலைமை அலுவலகத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட மின் இணைப்பிற்கு கட்டணம் செலுத்தியவர்களுக்கு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து மீதி தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் செலுத்திய தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: