விழுப்புரம் ஓட்டல் கடை மோதல் குறித்து பேச்சுவார்த்தை 2 திருநங்கைகள் மீது சரமாரி தாக்குதல்

உளுந்தூர்பேட்டை, ஏப். 21: கூவாகம் கூத்தாண்டவர் கோயில்  திருவிழாவிற்கு வந்த வெளிமாவட்ட திருநங்கைகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ஓட்டல் உரிமையாளரை  தாக்கி, ஓட்டலை சூறையாடியனர். இச்சம்பவம் தொடர்பாக நேற்று கூவாகம் கூத்தாண்டவர்  கோயில் அருகில் திருநங்கைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட திருநங்கைகள், ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட வேலூர், சென்னை பகுதியை சேர்ந்த  திருநங்கைகளிடம் ஏன் இப்படி செய்து திருநங்கைகளுக்கு அவமானத்தை  ஏற்படுத்துகிறீர்கள் என  கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வேலூர் மாவட்ட திருநங்கைகள் கள்ளக்குறிச்சி  மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் சந்தியா(26), நித்தியா (29) ஆகிய இரண்டு  பேரை இரும்பு பைப், கட்டை, கல் உள்ளிட்டவை கொண்டு சரமாரியாக தாக்கி  உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் உளுந்தூர்பேட்டை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதனிடையே திருநங்கைகளை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உளுந்தூர்பேட்டை அரசு  மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து  வந்த உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் மற்றும்  போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து அனைவரும்  கலைந்துசென்றனர். இச்சம்பவம்  உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: