வேலூர் தனியார் மருத்துவமனையில் செல்போன் பறிப்பு கண்டித்து மறியலில் ஈடுபட்டவர் கைது

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்போனை பறித்ததை கண்டித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் கவுன்ெஷரீப்(42), டயர் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லையாம். இதனால் அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு பதிவு செய்ய வரிசையில் காத்திருந்த அவர் கால் வலித்ததால் கீழே தரையில் அமர்ந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் சிலர், ‘இங்கு அமரக்கூடாது. மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும்’ எனக்கூறினர். அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை கவுன்ஷெரீப் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட செக்யூரிட்டிகள் செல்போனை பறித்தனர். இதில் ஆத்திரமடைந்த கவுன்ெஷரீப், மருத்துவமனை எதிரே உள்ள வேலூர்-ஆற்காடு சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டார். இதையறிந்த போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை கொடுத்து விடுவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர் மறியலை கைவிட்டார். ஆனால் சாலையில் அமர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்ஷெரீப்பை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: