வேலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழாவுக்கு 1,000 போலீசார் பாதுகாப்பு சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

வேலூர், ஜன.26: வேலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 73வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவை எளிமையாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நேற்று விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மேலும் கோட்டை கொத்தளத்தில் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் ஒத்திகை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் வேலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. எஸ்பி ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் உள்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-ஆந்திர எல்லையான பொன்னை, சைனகுண்டா, கிறிஸ்டியான்பேட்டை ஆகிய சோதனைச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய நகர சந்திப்புகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கி உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: