கணியம்பாடியில் சீறிப்பாய்ந்த காளைகள் காவல்துறை, வருவாய்த்துறை கண்காணிப்பில் படம் உள்ளது...

வேலூர், ஜன.19:

கணியம்பாடி புதூரில் நேற்று நடந்த மாடு விடும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.வேலூர் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை தொடர்ந்து மஞ்சு விரட்டு எனும் மாடு விடும் விழாக்கள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் கீழ்அரசம்பட்டு, கீழ்முட்டுக்கூர், பரதராமி வீரிசெட்டிப்பல்லி ஆகிய 3 இடங்களில் மாடு விடும் விழாக்கள் நடந்தன. இதில் கீழ்அரசம்பட்டில் நடந்த மாடு விடும் விழாவில் மாடு முட்டி சேத்துப்பட்டை சேர்ந்த நாமதேவன் என்ற முதியவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேரணாம்பட்டு அருகே நடந்த மாடு விடும் விழாவில் சிறுவன் ஒருவன் பலியானான்.

இச்சம்பவங்களை தொடர்ந்து நேற்று கணியம்பாடி புதூரில் நடந்த மாடு விடும் விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தடுப்புகளை தாண்டி யாரும் வெளியில் வராதவாறு கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது. மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளியும் கடைபிடிக்கும்படி அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.காளைகளுடன் ஒரு சிலர் மட்டுமே விழா திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வௌியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மாடு விடும் விழாவை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆர்டிஓ பொறுப்பு காமராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி முன்னிலை வகித்தனர். விழாவில் காட்பாடி, வேலூர், கணியம்பாடி, ஆரணி மற்றும் கண்ணமங்கலம் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்கள் விழா மேடையில் பாராட்டப்பட்டனர்.

Related Stories: