முத்தூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 3 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகள்

திருப்பூர்: முத்தூர் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 3 லட்சத்திற்கு வளர்ச்சி திட்ட பணிகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 1,2,3,4,8,14 ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் 5,11 ஆகிய பகுதிகளில் ரூ.15.50 மதிப்பில் புதிய திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதற்கு கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல்-அமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் முத்தூர் பேரூராட்சி வார்டு 11-ல் ஈரோடு ரோடு வாரச்சந்தைக்கு செல்லும் வழியில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து கே.என். தோட்டம் வரை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யப்பட்ட பணி, ஊடைம் பகுதி நகப்பாளையம் காலனி பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் விரிவாக்க பணி, தொட்டியபாளையம் தோப்பு தோட்டம் பகுதியில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை, மேட்டுக்கடை, கல்லேரி மற்றும் சின்னமுத்தூர் மேற்கு பகுதிகளில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி, வார்டு எண் 5-ல் மேடுகாடு பகுதியில் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் ஏற்கனவே உள்ள ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யப்பட்ட பணி என மொத்தம் ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுபோல் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் 2020-2021-ன் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் வார்டு எண் 14 சுப்பிரமணியபுரத்தில் மழைநீர் வடிகால் கட்டும் பணி, வார்டு எண் 2 வேலாயுதம்பாளையத்தில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.26 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் தொட்டியபாளையம் தோப்புத்தோட்டம் பகுதியில் உள்ள மண்சாலையை, தார்சாலையாக அமைக்கும் பணி மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி, வார்டு எண் 8-ல் ரூ.28 லட்சம் மதிப்பில் நவக்காடு குறுக்கு வீதி, குண்டுபுளிக்காடு வீதி, சூரிபு நாராயணவலசு பகுதியில் உள்ள மண் சாலையை, தார்சாலையாக அமைக்கும் பணி, பொதுநிதி வேலைகள் 2021-2022-ன் கீழ் வார்டு எண் 4-ல் ரூ.3.80 லட்சம் மதிப்பில் கொடப்பாளி பகுதிகளில் புதிய ஆழ்குழாய் கிணறு வேலைகள் அமைத்து மின்மோட்டார் பொருத்தி குடிநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணி, வார்டு எண் 1-ல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கல்லேரி ஆதிதிராவிடர் காலனியில் குடிநீர் தொட்டி அமைக்கும் பணி, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் தொட்டியபாளையம் ஆரம்ப பள்ளி மைதானத்தில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சத்துணவு ஊராட்சி ஒன்றிய சமையல் அறை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பில் புதிய திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும், முத்தூர் பேரூராட்சியில் 2021-2022 நிதியாண்டில் ரூ.6 கோடியே 73 லட்சம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் முத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிகளில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் மோகன், முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: