கொரோனா பரவலை கட்டுப்படுத்த தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் மூடல்

ஊட்டி:கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூடாத வகையில் அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட்டன. கொரோனாவின் இரண்டாவது அலை சற்று குறைந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன.

மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் அனுமதிக்கப்பட்டது. கடந்த ஆறு மாதமாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டு வந்த நீலகிரி மாவட்ட வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நேரம் குறைக்கப்பட்டது. தற்போது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், தொற்று பரவாமல் தடுக்க தற்போது பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் உட்பட அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,``கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தற்போது பூங்காவிற்குள் சுற்றுலா பயணிகள் வரும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், புல் மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டால், அனைவரும் கூட்டம் கூட்டமாக அமருவதற்கும், வலம் வருவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால், தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து புல் மைதானங்களுக்குள்ளும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார். தற்போது பூங்காவில் உள்ள பெரிய மற்றும் சிறிய புல் மைதானங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் நடைபாதைகளின் வழியாக இத்தாலியன் பூங்கா சென்று, மீண்டும் நுழைவு வாயிலை வந்தடைகின்றனர். எங்கும் அமர்ந்து நேரத்தை போக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: