கொரோனா தடுப்பு நடவடிக்கை: கோவை மாவட்ட கலெக்டரிடம் அதிமுக-பாஜ எம்எல்ஏக்கள் மனு

கோவை:  கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேர், பாஜ எம்எல்ஏ ஒருவர் என மொத்தம் 10 எம்எல்ஏக்கள், தமிழக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதன் விவரம்: நம் நாட்டில், கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், உலகையே மீண்டும் அச்சுறுத்தி வரும் ஒமிக்கிரான் தொற்று தமிழகத்திலும் கடந்த 10 நாட்களாக பரவி வருகிறது. எனவே, வீதி, வீதியாக கிருமிநாசினி தெளித்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் ஆக்ஜிசன் படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். ஆக்ஜிசன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள் உடனடியாக கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக சிகிச்சை மையம் ஆகியவற்றில் உள்ள காலியிடம் தொடர்பாக மக்களுக்கு அன்றாடம் அறிவிக்க வேண்டும். அண்டை மாநில எல்லை, ரயில்நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் தீவிர பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.  

கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின்போது எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையை போன்று, தற்போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அதிதீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பரவலை தடுத்து, மக்களை பாதுகாக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories: