வேலூரில் கத்தியை காட்டி வழிப்பறி பயங்கர ஆயுதங்களுடன் ரவுடி கைது கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

வேலூர், டிச.6: வேலூரில் கத்தியை காட்டி ₹3 ஆயிரம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை கைது செய்த போலீசார், பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் நேற்று காலை தோட்டப்பாளையம் எல்ஐசி காலனி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி, நாகராஜ் என்கிற முசல்நாகராஜ்(40) என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, ‘நான் ரவுடி ஏற்கனவே கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் ஜெயிலுக்கு போய் வந்துள்ளேன். என்னிடமா பணம் இல்லை என்று சொல்லுகிறாய்’ என்று கூறி இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றுள்ளார். அப்போது பழனி ஒதுங்கிக்கொண்டதால் தப்பினார்.

இந்நிலையில் பழனி பாக்கெட்டில் வைத்திருந்த ₹3 ஆயிரம் பணத்தை முசல் நாகராஜ் பறித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பழனி கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்களிடம் கத்தியை காட்டி, ‘யாராவது கிட்ட வந்தால், கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டி உள்ளார். மேலும் இதைப்பற்றி போலீசாரிடம் புகார் தெரிவித்தால் தேடிவந்து கொலை செய்துவிடுவேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் பழனி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி நாகராஜ் என்ற முசல் நாகராஜை நேற்று மாலை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 வீச்சரிவாள்கள், ஒரு கத்தி, 150 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: