நீர் மாசடையும் அபாயம் குடியாத்தத்தில் கரையோரம் மலைபோல் குவிந்திருந்தது

குடியாத்தம், டிச.5: குடியாத்தத்தில் கவுன்டன்ய மகாநதி ஆற்றில் குப்பைகள் ஜேசிபி மூலம் அகற்றும் பணி நேற்று நடந்தது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பி வழிந்து வருகிறது. அணை நிரம்பி வழிந்து வரும் நீரானது குடியாத்தம் கவுன்டன்ய மகாநதி ஆற்றில் இருகரையை தொட்டப்படி பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

இந்நிலையில், குடியாத்தம் காமராஜர் தரைப்பாலம் அருகே நகராட்சி நிர்வாகத்தினரால் சேகரித்து பல டன் குப்பைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகள் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வருகிறது. இதனால், ஆற்று நீர் மாசடைந்து வருகிறது.

இந்நிலையில், காமராஜர் தரைப்பாலம் அருகே ஆற்றில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அதிகாரிகள் 3 ஜேசிபி இயந்திரம் கொண்டு ஆற்றிலேயே சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் இருந்த குப்பை கழிவுகளும் ஆற்றில் கலந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், `ஆற்றங்கரையோரம் நகராட்சியினரால் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பல டன் குப்பைகளில் சில வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில, மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றாமல், ஆற்றிலேயே சமன் செய்து வருகின்றனர். இதனால், ஆற்று நீரில் குப்பைகள் அனைத்தும் கலந்து வருகிறது. நீர் மாசடைவதை தடுக்க ஆற்றில் குப்பைகள் கொட்டக்கூடாது என நீதிமன்றம், அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரிகள் ஆற்றின் கரையோரம் உள்ள குப்பைகளை ஜேசிபி கொண்டு சமன் செய்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே முறையாக ஆற்றில் இருந்து குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

More