தொடரும் விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை மூலம் தக்காளி கிலோ ரூ.62க்கு விற்பனை

கோவை, டிச.5:  கோவையில் கூட்டுறவு துறையின் மூலம் 10 இடங்களில் தக்காளி ஒரு கிலோ ரூ.62க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தொடரும் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்த காய்கறிகள், வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, டி.யு.சி.எஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால், கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவையில் உள்ள கூட்டுறவு துறை நடத்தும் சிந்தாமணி தலைமை அலுவலகம், கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிட வளாகம், சிந்தாமணி என்.எஸ்.ஆர். சாலை கிளை அலுவலகம், மலர் அங்காடி கட்டிட வளாகம் பூ மார்க்கெட், ஆவின் பால் விற்பனை அலுவலக வளாகம், தெலுங்குபாளையம் கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகம், பாப்பநாயக்கன்பாளையம் கூட்டுறவு பண்டக வளாகம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய காய்கறி வளர்ப்போர் சங்கம், கோவை மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம், ஒண்டிபுதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய 10 இடங்களில் ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.62க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்களின் தேவைக்கேற்ப கொள்முதலை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: