ஓட்டேரி நீரை சுத்திகரித்து 7 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளை 2 நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கும்

வேலூர், டிச.2: ஓட்டேரி குடிநீரை சுத்திகரித்து வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்தில் 7 வார்டுகளுக்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. வேலூர் நகராட்சியாக இருந்தபோது நகர மக்களுக்கு மின்சார செலவின்றி குடிநீரை வழங்கும் கட்டமைப்புடன் 115 ஆண்டுகளுக்கு ஏற்படுத்தப்பட்ட ஓட்டேரி, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பணியை தனது பில்டர்பெட் டேங்க் மூலம் செய்து வந்தது. இந்நிலையில், ஓட்டேரியின் நீராதாரத்துக்கான வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் திசை மாற்றப்பட்டதால் நீரின்றி வறண்டே காட்சி அளித்து வந்த ஓட்டேரிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தும் கண்டு கொள்ளப்படாமல் இருந்து வந்தது.

இதுதொடர்பாக தினகரன் நாளிதழில் அடிக்கடி படங்களுடன் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, ஓட்டேரியின் நீர்வழிப்பாதைகள் அவசர, அவசரமாக சீரமைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஓட்டேரி தனது முழு கொள்ளளவை எட்டி மறுகால் வழிந்தோடி வருகிறது. இந்நிலையில் நீர்நிரம்பி பழைய நிலைக்கு திரும்பிய ஓட்டேரி நீரை சுத்திகரித்து மாநகராட்சியின் 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 7 வார்டுகளுக்கு உட்பட்ட சாயிநாதபுரம், அல்லாபுரம், பாகாயம், விருபாட்சிபுரம், பலவன்சாத்து பகுதி மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் 12 ஆயிரம் லிட்டர் வரை சப்ளை செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக ₹10 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 நாட்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், நகரின் ஒரு பகுதி குடிநீர் தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படும் என்று வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: