இல்லம் தேடி கல்வி மையங்களுக்கான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு: மாநில திட்ட இயக்குனர் தகவல்

வேலூர், டிச.2: இல்லம் தேடி கல்வி மையங்களுக்கான, கற்றல் மற்றும் கற்பித்தல் பொருட்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்று பரவல் காலத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்யவும், இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்ப்பதற்காகவும், தன்னார்வலர்களை கொண்டு தினசரி 1 முதல் ஒன்றரை மணி நேரம் (மாலை 5 முதல் இரவு 7 மணிக்குள்) கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ள ‘இல்லம் தேடிக் கல்வி மையங்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்காக தெரிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு பிரிவு வாரியாக 2 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், தங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடி அறிமுகம் ஏற்படுத்துவதற்காகவும், பள்ளி செயல்பாடுகளை அறிந்துகொள்வதற்காகவும், ஒரு நாள் உற்றுநோக்கல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்பு தன்னார்வலரின் குடியிருப்பு பகுதியிலுள்ள மாணவர்கள் அவர்களுடன் இணைக்கப்பட்டு, பள்ளி மேலாண்மைக் குழு ஒப்புதலுடன் பிரிவு வாரியாக அதற்கென தெரிவு செய்யப்பட்ட இடங்களில் தொடங்கப்பட வேண்டும். இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

அரசின் சுகாதாரத்துறை வாயிலாக வழங்கப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இல்லம் தேடிக்கல்வி மையத்தில் மாவட்டம், கிராமம், குடியிருப்பின் பெயர், இல்லம் தேடிக் கல்வி மையத்தின் பெயர் போன்ற விபரங்கள்அடங்கிய ப்ளக்ஸ் பேனர் போர்டு வைக்கப்பட வேண்டும். இதற்கான வடிவமைப்பு விரைவில் அனுப்பப்படும். இதற்குரிய செலவினத்தை மாவட்ட இதர வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ள நிதியில் ஐஇசி தலைப்பின் கீழ் மேற்கொள்ள வேண்டும். கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் நன்முறையில் நடைபெறுவதற்காக தன்னார்வலர்களுக்கு கையேடு அட்டைகள் மற்றும் சுவரொட்டிகள் பிரிவு வாரியாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தேவைப்படும் சில பொருட்கள் தொடக்க, உயர் தொடக்க நிலை பிரிவுகளுக்கு தனித்தனியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உரிய எண்ணிக்கையில் அரசு கொள்முதல் விதிகளை தவறாமல் பின்பற்றி மாவட்டங்களில் வாங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தொடக்க நிலை இல்லம் தேடி கல்வி மையத்திற்குரிய பொருட்களை ₹315க்கு மிகாமலும், உயர் தொடக்க நிலை மையத்திற்குரிய பொருட்களை ₹300க்கு மிகாமலும் வாங்கப்பட வேண்டும். இதற்குரிய செலவினத்தை இல்லம் தேடி கல்விக்கென மாவட்ட இதர வங்கி கணக்கில் விடுவிக்கப்பட உள்ள டிஎல்எம் நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: