அடுத்தடுத்த பருவமழையால் புதிய தென்னங்கன்று நடவில் உள்ளூர் விவசாயிகள் ஆர்வம்

பொள்ளாச்சி,டிச.2: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், தென்னை மற்றும் காய்கறி, மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், விவசாயிகள் பலருக்கு தென்னை சாகுபடி விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து இருப்பதால், விவசாயம் செழித்தோங்குகிறது. இதனால், தென்னை மரத்திலிருந்து உற்பத்தியாகும், இளநீர், தேங்காய் உள்ளிட்டவை வெளியிடங்களுக்கு அதிகளவு அனுப்பப்படுவதுடன், நார் உற்பத்தியும் அதிகமாக இருப்பதால், பொள்ளாச்சியிலிருந்து வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநில பகுதிக்கு அனுப்பப்படும்  தென்னை சார்ந்த பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனாலே விவசாயிகள் பலரும், தென்னை சாகுபடி தொழிலை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

சில ஆண்டுக்கு முன்பு, கோடை மழைக்கு பிறகு பெய்யும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாததால், சுமார் மூன்று ஆண்டுகளாக வறட்சியை நோக்கி சென்றது. இதனால், அந்நேரத்தில் புதிதாக தென்னை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இருக்கின்ற தென்னைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும், சில கிராமங்களில், வறட்சியால் வாடிய தென்னைகளை வெட்டி அகற்றி விட்டு வீட்டுமனைகளாக மாற்றிடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை சுமார் மூன்று மாதத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்துள்ளது. அதன்பின் வடகிழக்கு பருவமழை, இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் துவக்கம் வரையிலும் தொடர்ந்து இரண்டு மாதமாக பெய்துள்ளது. இதனால், தென்னைகள் புத்துணர்வு பெற்று, வாடி வதங்கிய நிலையிருந்த தென்னைகள் வளர்ச்சியடைய துவங்கியது. அதுபோல் நடப்பாண்டில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை மழை வலுத்தது. பின், ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரம் வரை தொடர்ந்திருந்தது.

இந்த மழையால், தென்னை விவசாயம் மீண்டும் செழிக்க ஆரம்பித்தது. தொடர் மழை மற்றும் வெயிலின் தாக்கம் குறைந்து சீதோஷண நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களில், புதிதாக தென்னை மரக்கன்றுகளை நடவு  செய்து வளர்ச்சியடையும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதிலும், ஆனைமலை, ஒடையக்குளம், கோட்டூர், வடக்கிபாளையம், முத்தூர், பொன்னாபுரம், சமத்தூர், நெகமம், சூலக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தின் பல இடங்களில், அன்மையில் புதிதாக தென்னங்கன்றுகள் நடப்பட்டிருப்பதை காணமுடிந்தது. தற்போது கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வடகிழக்கு பருவமழையும் பெய்வதால், மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து,  தென்னை விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்க பெறுகிறது. தொடர்ந்து பெய்த பருவமழையால், கோடை காலத்திலும் தென்னை மரக்கன்றுகள் வளர்ச்சியடைந்து, அடுத்தக்கட்ட  வளர்ச்சியை நோக்கி நகர்ந்து செல்ல வாய்ப்புள்ளது என, தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: