கொரோனா 2வது அலை காரணமாக மக்கள் ஆர்வம் கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிகரிப்பு

கோவை, ஏப். 17: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  கோவையில் தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்தான் 75 சதவீதம் பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என அனைத்து கட்டுப்பாடுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது அபராதம், கடை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

இதுதவிர மாநகராட்சி சார்பாக 15 வாகனங்களில் நாள்தோறும் மாநகராட்சி பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல் தொழில்துறையினர் தங்கள் நிறுவன ஊழியர்களில் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள முகாம் மூலம் சுகாதார துறையினரை அணுகி வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் காரணமாக மக்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை போன்றவற்றில் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டு அவர்களுடையே சந்தர்ப்பம் வரும்போது அழைக்கப்படுகிறார்கள்.

இது குறித்து சுகாதார துறையினர் கூறுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் இதுவரை கடந்த 15ம் தேதி நிலவரப்படி 2 லட்சத்து 95 ஆயிரத்து 477 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள். தற்போது தினமும் முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களை காட்டிலும் 2வது டோஸ் போடுவர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் 900, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 400, அரசு ஆரம்ப மருத்துவமனைகளில் 5476, தனியார் மருத்துவமனைகளில் 5999, மாவட்ட சுகாதார கிடங்கில் 50 என தற்போது 12 ஆயிரத்து 825 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

தினமும் 11 ஆயிரம் பேர் தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் 20 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டுக்கின்றனர். கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வேண்டும் என அரசிடம் கேட்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories:

>