திருமண மண்டபங்களில் 50 சதவீதம் விருந்தினர்களை அனுமதிக்க வேண்டும்

கோவை, ஏப் 13: திருமண மண்டபங்களில் 50 சதவீதம் விருந்தினர்களுடன் நிகழ்ச்சிகள் நடத்த  அனுமதிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் கேட்டரிங் ஓனர்ஸ்  அசோசியேசன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் நேற்று  பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்த பெட்டியில் தங்களது மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். இதில் கேட்டரிங் ஓனர்ஸ் அசோசியேசன்ஸ் சார்பில் தலைவர் மாதம்பட்டி நாகராஜ், செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் ஆனந்த்குமார், துணைத்தலைவர் ராமநாராயணன், பேரூர் ஹரிரன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் நாகராஜனை சந்தித்து மனு ஒன்று அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கேட்டரிங் தொழிலுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 125 நாட்கள் மட்டுமே  வேலை கிடைக்கிறது. இதனை நம்பி சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள், உணவு பரிமாறுபவர்கள் என ஆயிரக்கணக்கானேர் இதனை நம்பி உள்ளனர். மேலும் திருமண மண்டப உரிமையாளர்கள், மேடை  அலங்கார நிபுணர்கள், வாழை இலை மற்றும் பூ விற்பனையாளர்கள்,  வாடகை வாகன ஓட்டிகள் என இந்த தொழிலை நம்பி தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் உள்ளனர்.

கோவையில் மட்டும் 1 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நம்பிதான் இருக்கின்றனர். இந்நிலையில் திருமண மண்டபங்களில்  நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கொரோனாவை காரணம் காட்டி அரசு தடை  விதித்து உள்ளது. இதனால் இதனை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு  வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.தியேட்டர்கள், வணிக வளாகங்கள் எப்படி கட்டுப்பாடுகளுடன் இயங்க  அனுமதி அளிக்கப்படுகிறதோ அதே போன்று திருமண மண்டபங்களிலும்  கட்டுப்பாடுகளுடன் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டும். 50 சதவீதம் விருந்தினர்களுடன் நிகழ்ச்சிகள் நடத்த  அனுமதிக்கலாம்.

மேலும் விருந்தினர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம், உடல்  வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி மூலம் மண்டபத்தை 4 மணி  நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தல், வேலைக்கு வரும் நபர்களின்  உடற்தகுதியை உறுதி செய்தல், கையுறை, தலையுறை அணிவதை  கட்டயமாக்கலாம். இதுபோன்ற கட்டுப்பாடுகளுடன் திருமண  மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனைத்தொர்ந்து ராம்நகரில் கேட்டரிங் ஓனர்ஸ் அசோசியசன்ஸ்  கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர்  உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>