தகவல் சீட்டு கொண்டு வாக்களிக்க இயலாது அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க தேவையான 11 ஆவணங்கள் கலெக்டர் விளக்கம்

வேலூர், ஏப்.5:தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:நாளை நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கும் வகையில், வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர் சார்ந்துள்ள சட்டமன்ற தொகுதி பெயர், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி பெயர் மற்றும் முகவரி இடம்பெற்றிருக்கும்.மேலும் இந்த வாக்காளர் தகவல் சீட்டு வாக்காளர் தனது வாக்குச்சாவடி மற்றும் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை அறிந்து கொள்ள மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க இயலாது.

எனவே, வாக்காளர் அவரது வாக்காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தங்களின் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு மட்டுமே வாக்களிக்க முடியும்.அதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்களது ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: