மே 3ம் தேதி தொடங்க உள்ள பிளஸ்2 தேர்வுக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்க சிஇஓக்களுக்கு உத்தரவு அரசு தேர்வுகள் துறை சுற்றறிக்கை

வேலூர், ஏப்.5:பிளஸ்2 தேர்வுக்கான முன்னேற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை உததரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்படவில்லை. அதேபோல் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனால் 9, 10, பிளஸ்1 தேர்வுகள் நடத்தப்படாமல் ஆல்பாஸ் என்று அரசு அறிவித்தது. அதேநேரத்தில் பிளஸ்2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.மீண்டும் கொரோனா பரவல் காரணமாக பிளஸ்2 வகுப்புக்கும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அதற்கேற்ப பிளஸ்2 தேர்வு தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மே 3ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து கவனிக்க வேண்டும். தேர்வுக்கான விடை எழுதும் முதன்மை தாள்கள் மற்றும் மாணவர்களின் தகவல் இடம் பெறும் முகப்பு சீட்டை ஒன்றாக இணைக்க வேண்டும்.மொழிப்பாடங்களுக்கு, 30 பக்கங்களுக்கு புள்ளியிடப்பட்ட, கோடிட்ட வெற்றுத்தாள்கள் வழங்கப்படும். கூடுதல் விடைத்தாள்களும் அதேபோல் வழங்கப்படும். உயிரியலுக்கு, தாவரவியல், விலங்கியல் என, தனித்தனி முதன்மை தாள்கள், ஒரே முகப்பு தாளுடன் வழங்கப்படும். கணக்குப்பதிவியலுக்கு, கட்டங்கள் உள்ள விடைத்தாள்கள் தரப்படும்.வரலாறு தேர்வுக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வெளிப்புற வரைபட தாள் இணைக்கப்படும். புவியியலுக்கு ஒரு வெளிப்புற வரைபட தாள் தரப்படும். வணிக கணிதம் மற்றும் புள்ளியியலுக்கு, வரை கட்ட தாள் தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: