செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் விழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ஈரோடு, ஏப். 1:     ஈரோடு செல்லாண்டியம்மன் கோயில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஈரோடு முனிசிபல் சத்திரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் குண்டம் விழா ஆண்டு தோறும் விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான விழா கடந்த 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 28ம் தேதி பக்தர்கள் காவேரி ஆற்றில் இருந்து பால் குடம் எடுத்து வந்தனர். 29ம் தேதி இரவு 9 மணிக்கு மேல் அக்னி கபாலம் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் (30ம் தேதி) இரவு குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடந்தது. இதில், அதிகாலை கோயில் பூசாரிகள் முதலில் குண்டம் இறங்கினார். இதைத்தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு அரிவாள் ஏறி அருள் வாக்கும் சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. 1ம் தேதி (இன்று) மாலை 4.30 மணிக்கு மறுபூஜை, கும்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Related Stories: