பெரும்புதூர் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் நெரிசல்: கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்

பெரும்புதூர், மார்ச் 18: பெரும்புதூர் பஸ் நிலையத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை, பேரூராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது என புகார் எழுந்துள்ளது. பெரும்புதூர் பேரூராட்சியின் மைய பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. பெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்கின்றனர்.பெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,  ஆகிய பகுதிகளுக்கு செல்ல தினமும் பெரும்புதூர் பஸ் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் பஸ் நிலையத்தின் உள்ளே பஸ்சை கொண்டு வர முடியாமல், டிரைவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர். இதையொட்டி, அங்கு படும் நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பெரும்புதூர் பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கபடுகின்றன. இதையொட்டி, பெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள், பெரும்புதூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். இங்கு, வரும் பயணிகள் அமர்வதற்காக இருக்கைகள் அமைக்கபட்டுள்ளன. அதனை, சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் பயனிகள் அமர்வதற்கு இருக்கை இல்லாமல் அவதியடைகின்றனர். மேலும் பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கபட்டுள்ளதால், அரசு பஸ்கள் பஸ் நிலையம் உள்ளே செல்ல முடியாமல் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கிவிட்டு செல்கின்றன. இதுபற்றி பெரும்புதூர் பேரூராட்சி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

Related Stories: