கிராம நிர்வாக அலுவலர் வராததால் பூட்டியே கிடக்கும் விஏஒ அலுவலகம்: அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

மாமல்லபுரம், மார்ச் 17: பூஞ்சேரி பகுதியில் பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தால், பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மாமல்லபுரம் பேரூராட்சி பூஞ்சேரி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள, லால்பகதூர் தெருவில் விஏஓ அலுவலகம் உள்ளது. இங்கு சாதி, வருமானம், இருப்பிடம், பட்டா, சிட்டா, வாரிசு, பிறப்பு, இறப்பு சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்றுகளை பெறுவதற்காக அரசு இ-சேவை மையத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்கின்றனர். ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட சான்றுகளை சரி பார்க்க பொதுமக்கள் விஏஓ அலுவலகம் வந்து பலமணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.  மேலும், விஏஓ அலுவலகம் பூட்டு போட்டு பூட்டியே கிடப்பதால், இங்கு வரும் மக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விஏஓவை போனில் தொடர்பு கொண்டால் எடுப்பதில்லை. அப்படி எடுத்தாலும் நான் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் இருக்கிறேன். இப்போது என்னால் வரமுடியாது என கூறி போனை கட் செய்து விடுகிறார். தொடர்ந்து தொடர்பு கொண்டால் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். இதனால், ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட பல்வேறு சான்றுகளை பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம், இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட விஏஓ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: