காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா கல்குறிச்சியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி விநாயகஜோதி (45). இவர்களது மகள் வர்ஷா (21). இந்நிலையில், முத்துக்குமாரின் அக்கா மகன் யுவராஜாவிற்கும் (32), வர்ஷாவிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த திருமணத்துக்கு வர்ஷா மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த யுவராஜா, இன்று காலை முத்துக்குமாரின் வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, யுவராஜா திடீரென அரிவாளால் வர்ஷாவை வெட்ட முயன்றார். இதை விநாயகஜோதி தடுக்க முயன்றதால் அவர் மீது பலத்த வெட்டு விழுந்தது. மேலும், ஆத்திரம் தீராத யுவராஜா, வர்ஷாவையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். பலத்த காயம் அடைந்த விநாயகஜோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வர்ஷா பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்து மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், வர்ஷாவை மீட்டு சிகிச்சைக்காகவும், விநாயகஜோதி உடலை பிரேத பரிசோதனைக்காகவும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே யுவராஜா, அரிவாளுடன் மல்லாங்கிணறு போலீசில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
