தருமபுரி மாவட்டம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள பொப்பிடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தம்பி மாரிமுத்து. இருவருக்கும் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள ஒரே கிணறு மூலம் கூட்டு சேர்ந்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதில், வெங்கடேசனின் மனைவி தனலட்சுமிக்கும், மாரிமுத்துவின் மகன் செந்தில் அரசுக்கும் இடையே கிணற்றில் இருந்து நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல நேற்று தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தனலட்சுமியிடம் செந்தில் அரசு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த செந்தில் அரசு, தான் சென்ட்ரிங் வேலைக்கு வைத்திருந்த இரும்பு சுத்தியலால் தனலட்சுமியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள சீரண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ், விவசாயி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் பால் கறந்துவிட்டு, அதனை பால் சொசைட்டியில் ஊற்றுவதற்காகத் தனது பைக்கில் சென்றுள்ளார்.

சீரியம்பட்டி ஏரிக்கரை அருகே அவர் சென்றபோது, அங்கு வந்த ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் மாதேஷை வழிமறித்து திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அவர்கள் தங்களின் கையில் வைத்திருந்த கத்தி மற்றும் பீர் பாட்டிலால் மாதேஷின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் பல இடங்களில் கொடூரமாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த மாதேஷை, அந்த வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாதேஷ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, உயிரிழந்த மாதேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு கொடூர கொலைச் சம்பவங்கள் குறித்து மாரண்டஹள்ளி காவல் துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள கொலையாளிகளான செந்தில் அரசு, ரமேஷ் மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட மூவரையும் பிடிப்பதற்காகப் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Stories: