2வது திருமணம் செய்ய மறுத்த பெண் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை: வாலிபர் கைது

காளஹஸ்தி: கணவரை பிரிந்து தாய்மாமன் மகனுடன் நெருங்கி பழகிய பெண், அவரை திருமணம் செய்ய மறுத்து வேறொருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் கொலை செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் இல்லத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நிரோஷா (32). இவருக்கும் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் மணவூரை சேர்ந்த கார்த்திக் (36) என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 5 மற்றும் 1ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிரோஷா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தனது குழந்தைகளுடன் இல்லத்தூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 8ம்தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நிரோஷா கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் நிரோஷாவை கொலை செய்தது அவரது தாய்மாமன் மகன் நாகராஜு (27) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
கணவரை விட்டுப்பிரிந்த நிரோஷாவுக்கும் அவரது தாய்மாமன் மகனான நாகராஜுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். இந்நிலையில் நிரோஷாவை 2வது திருமணம் செய்துகொள்ள நாகராஜு திட்டமிட்டார். ஆனால் இதை ஏற்காத நிரோஷா, வேறு ஒருவரை 2வது திருமணம் செய்ய உள்ளதாக கூறினார்.

அதற்கு நாகராஜு, என்னுடன் நெருங்கி பழகிவிட்டு வேறு ஒருவரை 2வது திருமணம் செய்வதா? என கேட்டுள்ளார். ஆனால் அதனை நிரோஷா ஏற்க மறுத்தார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த நாகராஜு சம்பவத்தன்று நள்ளிரவில் வீடு புகுந்து நிரோஷாவை ஹீட்டர் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார், நாகராஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: