*தப்பியவர்களுக்கு வலை
மேலூர் : மேலூர் அருகே 5.500 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.மேலூர் அருகே சூரக்குண்டு மாத்தி கண்மாய் பகுதியில் மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக நின்றிருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பியோடியது.
இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் மாட்டி கொள்ள, மற்றவர்கள் தப்பியோடி விட்டனர். விசாரணையில் அவர் சொக்கம்பட்டியை சேர்ந்த அபினேஷ் (22) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் விற்பனைக்காக 5.500 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அபினேஷை கைது செய்து, அவரிடமிருந்த 5.500 கிலோ கிராம் கஞ்சா, எடை மிஷின், 2 கத்திகள், ஒரு டூவீலரை பறிமுதல் செய்து மேலூர் போலீசாரிடம் ஒப்படத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய மேலும் சில நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் சட்டவிரோதமாக செயல்படுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற குற்றச்செயல்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
