திருப்பதியில் இருந்து லாரி மூலம் கடத்தி வந்து வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது: 22 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: திருப்பதியில் இருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்து வீட்டில் பதுக்கி, விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படைக்கு சிலர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் சேதுராமன்(34) என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டில் இருந்து 11 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. உடனே சேதுராமனை தனிப்படையினர் பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, சேதுராமன் கூட்டளியான ராஜேஷ்(28) என்பவர் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து சரக்கு லாரி மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து சிறுக சிறுக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

உடனே, சேதுராமன் அளித்த தகவலின் படி, வியாசர்பாடி சாஸ்திரி நகரில் உள்ள ராஜேஷ் வீட்டில் சோதனை நடத்தி 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். பின்னர் கஞ்சா கடத்தி விற்பனை செய்ததாக ராஜேஷை போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: