அக்கா கணவரை விஷ ஊசி போட்டு கொன்றவர் 2 குழந்தைகளை கொன்ற வாலிபர் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை: சொத்துக்காக நடந்த கொடூரம்

திருமலை: கோடிக்கணக்கான சொத்துக்காக அக்காவின் கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த வாலிபர், தனது குழந்தைகளை ரயிலில் தள்ளி கொன்றுவிட்டு அதே ரயிலில் பாய்ந்து மனையியுடன் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், புச்சிரெட்டிபாலத்தில் வேளாண்மை அதிகாரியாக பணி புரிந்தவர் ஸ்ரீஹரி. இவரது மனைவி லாவண்யா. மைத்துனர் ஹரிகிருஷ்ணா. ஸ்ரீஹரி, தனது மைத்துனரான ஹரிகிருஷ்ணா (33) பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பதிவு செய்து, பணத்தையும் கொடுத்து வைத்திருந்தாராம். சில மாதங்களுக்கு முன் ஸ்ரீஹரி, வீடு கட்டுவதற்காக ஹரிகிருஷ்ணாவிடம், தான் கொடுத்த பணம் மற்றும் சொத்துகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணா, பணம் கொடுப்பதாக கூறி அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் சொத்துகளை அடைய முடிவு செய்த ஹரிகிருஷ்ணா, ஸ்ரீஹரியை கொல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி ​​ஹரிகிருஷ்ணா, பெஞ்சலகோனா கோயிலுக்கு ஸ்ரீஹரியை காரில் அழைத்து சென்றார். அங்கு தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஹரிகிருஷ்ணா காரை திடீரென நிறுத்தினார். ஏற்கனவே திட்டமிட்டபடி அங்கு வந்திருந்த ஹரிகிருஷ்ணாவின் நண்பர்களான ரவீந்திரா, யானதி ஆகியோர் உதவியுடன், ஸ்ரீஹரிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரி லாவண்யாவிடம் கோயிலுக்கு சென்றுவிட்டு வரும் ஸ்ரீஹரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர் கதறி அழுதார். பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே ஹரிகிருஷ்ணா, மீதமுள்ள சொத்துக்களையும் தன் பெயரில் அவசரம் அவசரமாக பதிவு செய்ய முயன்றார். இதையறிந்த லாவண்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக நெல்லூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிகிருஷ்ணாவின் நண்பர்களான ரவீந்திரா மற்றும் யானதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான ஹரிகிருஷ்ணாவை தேடி வந்தனர். இதற்கிடையே கொலை வழக்கின் விசாரணையில் அலட்சியமாக இருந்ததாக புச்சிரெட்டிபாலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் 23 ஊழியர்களையும் எஸ்பி அனிதாவேஜெண்ட்லா இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆய்வாளர் மாதாங்கி சீனிவாசராவ் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்த ஹரிகிருஷ்ணா கலக்கமடைந்தார். இதனால் தனது மனைவி பிரணிதி, குழந்தைகள் மூகாம்பிகா (5), கவுசிகிருஷ்ணா (3) ஆகியோருடன் பிரகாசம் மாவட்டம் சிங்கராயகொண்டா ரயில் நிலையத்தின் 2ம் நடைமேடைக்கு நேற்று வந்தார். அப்போது அங்கு வந்த சரக்கு ரயில் முன் குழந்தைகளை தள்ளிய தம்பதியினர், தாங்களும் அந்த ரயில் முன் பாய்ந்தனர். இதில் 4 பேரும் உடல் சிதறி இறந்தனர். இதையறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: