சேலம் பஸ் ஸ்டாண்டில் போர்வெல் ஆபரேட்டர் அடித்துக்கொலை

சேலம்: சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் போர்வெல் ஆபரேட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சஞ்சனாபலோட் மாவட்டம், குவகோண்டி அருகேயுள்ள ஜூர்த்தோலா பகுதியை சேர்ந்தவர் விரேந்திர பட்டேல் (40), போர்வெல் ஆபரேட்டர். இவர், கோவை மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு போர்வெல் நிறுவனத்தில், ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் சேலத்திற்கு வீரேந்திர பட்டேல் வந்துள்ளார்.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்சில் வந்திறங்கிய அவர், தனது செல்போனை அங்குள்ள ஒரு பழுதுபார்ப்பு கடையில், ரிப்பேர் பார்க்க கொடுத்துள்ளார். பின்னர், வெளியில் சென்று மது குடித்துவிட்டு, போதையில் மீண்டும் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள வேறு ஒரு செல்போன் கடைக்கு சென்று, தான் பழுதுபார்க்க கொடுத்த செல்போனை கேட்டுள்ளார்.

அதற்கு அந்த கடையில் இருந்த ஊழியர்கள், இங்கு செல்போனை தரவில்லை, வேறு எங்காவது கொடுத்தீர்களா என பாருங்கள் எனக்கூறியுள்ளனர். ஆனால், அவர் இங்கு தான் கொடுத்தேன் எனக்கூறி, கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், கடை ஊழியர்கள் 3 பேர் சேர்ந்து, போதையில் இருந்த வீரேந்திர பட்டேலை சரமாரியாக முகத்தில் தாக்கி, கீழே தள்ளி விட்டுள்ளனர். அவர், கீழே விழுந்தபோது பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அங்கேயே மயங்கியுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து செல்போன் கடை ஊழியர்களான மணி (25), கவியரசன் (24) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: