திட்டக்குடி: கடலூர் மாவட்டம் ராமநத்தம், ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி மணியம்மாள்(எ) மணி(61). இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி மணியம்மாள் அவரது வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் நேற்று இறந்து கிடந்துள்ளார். தகவலின்படி ராமநத்தம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மூதாட்டி முகம் மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீக்காயம் உள்ளது. மூதாட்டியை யாரேனும் கொலை செய்து தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூதாட்டியின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக எடுத்து செல்ல முயன்றபோது அவரது மூத்த மகன் வேல்முருகன் மற்றும் அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மூதாட்டி உடலை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
