சிவகாசி: சொகுசு காரில் வந்து வியாபாரி வீட்டில்75 பவுன் நகைகளை திருடிய முகமூடி கொள்ளையர் களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி உழவர் சந்தை அருகே ஐயப்பன் காலனி 5வது தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராம் (33). சிவகாசியில் சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இவர் குடும்பத்தினரோடு, நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டிற்கு எதிரே சொகுசு கார் நின்றிருந்தது.
அரவிந்த்ராம் வீட்டுக்குள் நுழைந்தபோது, உள்ளேயிருந்து முகமூடி அணிந்த 3 கொள்ளையர், அரிவாள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்து அரவிந்த்ராமை மிரட்டி விட்டு சொகுசு காரில் ஏறி தப்பிச் சென்றனர். வீட்டில் சென்று பார்த்தபோது 75 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்படி சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிந்து முகமூடி கொள்ளையரை தேடி வருகின்றனர்.
