திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த அத்திக்கடை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (60). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடையில் குட்கா பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தாகவும், இது தொடர்பாக போலீசார் சோதனை நடத்தி அவர் மீது வழக்கு பதிந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கர் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை நடத்தி குட்கா பொருட்களை கைப்பற்றினர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்க 2 ஏட்டுகளுக்கு ஜிபே மூலம் பல தவணைகளாக ஆயிரக்கணக்கில் பணம் பரிவர்த்தனை செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக உயரதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நன்னிலம் டிஎஸ்பி முத்துகுமரன் ரகசிய விசாரணை நடத்தியதில், குட்கா வியாபாரியிடம் ஜிபே மூலம் நன்னிலத்தை சேர்ந்த ஏட்டு பாரதிராஜா மற்றும் குடவாசலை சேர்ந்த ஏட்டு மனோகரன் ஆகியோர் பணம் பெற்றது தெரிய வந்தது. இதற்கான விசாரணை அறிக்கையை டிஎஸ்பி, திருவாரூர் எஸ்பியிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து 2 ஏட்டுக்களை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சதீஷ்குமார் நேற்றுமுன்தினம் இரவு அதிரடியாக உத்தரவிட்டார்.
