உல்லாசமாக இருக்கலாம் என அழைத்து பைனான்சியரிடம் ரூ.50 லட்சம் கேட்டு நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்: திருச்சி பெண் உட்பட 2 பேர் கைது

காரைக்குடி: உல்லாசமாக இருக்கலாம் என அழைத்து பைனான்சியரை நிர்வாணமாக்கி தாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருச்சி பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

​சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே தம்பிபட்டியை சேர்ந்தவர் வடிவேல் (40). பைனான்சியர். இவரை, கடந்த மாதம் மகேஸ்வரி என்ற பெண் செல்போனில் தொடர்பு கொண்டு அன்பாக பேசியுள்ளார். இருவரும் போனில் அடிக்கடி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மகேஸ்வரி தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். கடந்த ஜூன் 9ம் தேதி வடிவேலிடம் இருந்து ஜிபே மூலம் ரூ.4,500 பெற்றுள்ளார். பின்னர் கடந்த ஜூன் 24ம் தேதி வடிவேலை மீண்டும் தொடர்பு கொண்டு மகேஸ்வரி பேசியுள்ளார். அப்போது, காரைக்குடி வந்தால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். இதையடுத்து வடிவேல் அங்கு வந்துள்ளார். அவரை அங்குள்ள பழைய ஓட்டு வீட்டிற்கு அப்பெண் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த மர்ம கும்பல், திடீரென வடிவேலை தாக்கி வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தியது.

மேலும், அவரை தொடர்ந்து கொடூரமாகத் தாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து பணம் தருவதாக கூறி ஒரு சில இடங்களுக்கு வடிவேல் அழைத்து சென்றுள்ளார். எங்கும் பணம் கிடைக்காத சூழலில், அவரை சாலையோரம் இறக்கி விட்டு விட்டு கும்பல் தப்பிச் சென்றது.

இதுகுறித்து வடிவேல், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, காரைக்குடி புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டறிந்தனர். இதில் மகேஸ்வரி, திருச்சி காட்டூரை சேர்ந்தவர் என்பதும், இவர் பியூட்டி பார்லர் நடத்தி வருவதும் தெரியவந்தது. இவரையும், இவருக்கு உடந்தையாக இருந்த திருச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வனையும் போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: