கோவை: கோவை கணபதி மாநகர் எஸ்.ஆர்.வி.நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன் (67). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது இளைய மகள் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரை கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சார்ந்த முருகேசன் என்பவரது மகன், டாக்டர் விக்னேசுக்கு கடந்த 2024ல் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்ததும் முருகேசன், மனைவி வாசுகி, மகள் ஜீவிதாவுடன் காளப்பட்டியில் உள்ள சண்முகபாண்டியனுக்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் பரப்பளவிலான பங்களாவிற்கு குடிவந்தார்.
இதற்கிடையே, சண்முகபாண்டியன் தனது மாப்பிள்ளை விக்னேசுக்கு கோவையில் அரசுப் பணி வாங்கி கொடுத்துள்ளார். விக்னேஷ் ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 2024 ஜூலை 1ம் தேதி சண்முகபாண்டியன் மாப்பிள்ளை விக்னேசிடம் வீட்டில் உள்ள தங்க நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்படி லாக்கர் மற்றும் பீரோ சாவியை ஒப்படைத்துள்ளார். அப்போது விக்னேஷ் லாக்கர் மற்றும் பீரோவை திறந்து 1000 பவுன் தங்க நகைகளை சரிபார்த்து உறுதி செய்து சாவியை பெற்றுக்கொண்டார். இந்தநிலையில், விக்னேஷ் குடும்பத்தினர் தங்கி இருந்த காளப்பட்டி பங்களாவை சண்முகபாண்டியன் கடந்த 2025 டிசம்பரில் ரூ.15 கோடிக்கு விற்றுள்ளார். அதன்பின், விக்னேஷ் தனது மனைவியிடம் தொழில் தொடங்க பணம் வேண்டும் என்றும், வீட்டை தனது பெயருக்கு மாற்றி தரும்படியும் கேட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக, விக்னேஷ் மனைவியை விட்டு பிரிந்து குடும்பத்துடன் சித்ரா பகுதி அருகே வேறு வீட்டிற்கு குடியேறிவிட்டார். இதைத்தொடர்ந்து, சண்முகபாண்டியன் லாக்கரை உடைத்து பார்த்தபோது 1000 பவுன் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். விக்னேசிடம் கேட்டபோது, 100 பவுன் மட்டும் திருப்பி கொடுத்தார். சண்முகபாண்டியன் புகாரின்படி கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விக்னேஷ் (36) மற்றும் அவரது தாயார் வாசுகி (58) மற்றும் சகோதரி ஜீவிதா (38) ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
