வீரவநல்லூர்: நெல்லை அருகே பழிக்குப்பழியாக நடந்த இரட்டை கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேர் சிக்கிய நிலையில் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி உறவினர்கள் 3வது நாளாக தந்தை, மகன் உடல்களை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து(40) அவரது 5வயது மகன் ஜெயராஜ்(5) ஆகியோர் கடந்த 2ம் தேதி மாலை 11 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.மூலச்சியைச் சேர்ந்த பெருமாள்பாண்டியன் தரப்பினருக்கும், காளிமுத்து தரப்பினருக்கும் 20 ஆண்டு கால பகையால் பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது. இதுவரை 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக 11 பேர் கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கொலையில் தொடர்புடைய மூலச்சியைச் சேர்ந்த ராசையா மகன் மகேந்திரன் என்ற மகேஷ்(29), வெள்ளபாண்டி மகன் குமார் என்ற கொக்கி குமார் (23), ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துச்செல்வன்(29) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யும் வரை காளிமுத்து, ஜெயராஜ் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் 3வது நாளாக நேற்று மறுப்பு தெரிவித்து்ளனர்.
