வேலை தருவதாக அழைத்து சென்று பெண்ணிடம் நகை, பணம் பறித்து கிணற்றில் தள்ளி கொல்ல முயற்சி

திருமலை: கூலி வேலை தருவதாக அழைத்து சென்று பெண்ணிடம் இருந்த நகை, பணத்தை பறித்துக்கொண்ட மர்ம ஆசாமி, அவரை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் திம்மாபூர் கிசான்நகரை சேர்ந்தவர் கங்காதரலட்சுமி(55). இவரது மகன் சந்தீப். கூலித்தொழிலாளிகள். அப்பகுதியில் கூலித்தொழிலாளர்கள் அனைவரும் தினமும் காலை ஓரிடத்தில் சந்திப்பார்கள். அப்போது அங்கு வரும் மேஸ்திரிகள் கூறும், வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினமும், தொழிலாளர்கள் ஒன்று கூடும் இடத்திற்கு தாயும், மகனும் சென்றனர். காலை சுமார் 11 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர், வீட்டு வேலை செய்ய வேண்டும் எனக்கூறி கங்காதர லட்சுமியை அழைத்து சென்றார்.

நுஸ்துலாபூர் கிராமத்தில் ஒதுக்குப்புமாக உள்ள வீட்டிற்கு அழைத்து சென்ற அந்த நபர், திடீரென தன்னிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 6 கிராம் கம்மல், ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக்கொண்டார். பின்னர் அருகே உள்ள விவசாய கிணற்றில் தள்ளியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கங்காதர லட்சுமி கூச்சலிட்டபடி கிணற்றில் இருந்த மோட்டார் கயிற்றை பிடித்து ஏறி வந்தார். இதை பார்த்த அந்த மர்ம நபர், கயிற்றை அறுத்துவிட்டு தப்பிச்சென்றார். இதனால் கிணற்றில் விழுந்த கங்காதர லட்சுமி நீந்தியபடி பைப்பை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். ஆனால் அருகே யாரும் இல்லாததால் அவரை மீட்க முடியவில்லை.

இந்நிலையில் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பிய சந்தீப், வீட்டில் தனது தாய் இல்லாததை கண்டு அச்சம் அடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார், கங்காதர லட்சுமி வைத்திருந்த செல்போன் சிக்னலை கொண்டு நுஸ்துலாபூர் கிராமம் முழுவதும் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று கிணற்றின் அருகே சென்ற நில உரிமையாளர், கங்காதரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கிராம மக்கள் உதவியுடன் கயிற்றை கட்டி கங்காதர லட்சுமியை சுமார் 21 மணி நேரத்திற்கு பிறகு மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கங்காதரலட்சுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை பறித்துக்கொண்டு கிணற்றில் தள்ளிவிட்டு சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: