நாங்கள் கடுமையாக போட்டியிட்டு சிலவற்றில் வென்றோம் தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க திமுக அரசு நேர்மையாக செயல்பட்டது: ஆந்திரா அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு

திருமலை: தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்க திமுக அரசு நேர்மையாக செயல்பட்டது என ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் பல தொழிற்சாலைகள் அண்டை மாநிலத்திற்கு சென்றுவிட்டது. அதற்கு திமுக அரசுதான் காரணம் என தவெக அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் பேசியதாவது: ‘ஆந்திராவில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாட்டில் முந்தைய திமுக அரசுடன் நாங்கள் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வென்றோம். சிலவற்றில் தோற்றோம். ஆனால் திமுக அரசாங்கம் தங்களிடம் பணம் கேட்பதாக ஒரு முதலீட்டாளர் கூட எங்களிடம் புகார் செய்வதை நான் கேட்டதில்லை.

திமுக அரசு ஒரு நேர்மையான மற்றும் தொழில்முறை முதலீட்டு செயல்முறையை நடத்தியது. அதற்கு திமுக அரசுக்கு பாராட்டுக்கள்’ என்றார். திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக தவெகவினர் பேசி வரும் தற்போதைய நிலையில், ஆந்திர மாநில அமைச்சர், முந்தைய திமுக அரசை பாராட்டி உள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: